சிலிண்டர் முறைகேட்டில் ஈடுபட்டவர் கைது
சிலிண்டர் முறைகேட்டில் ஈடுபட்டவர் கைது
திருத்துறைப்பூண்டி தாலுகா பகுதியில் வீட்டு சிலிண்டரை, வணிக சிலிண்டராக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ஆகியோருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு திருச்சி போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில், தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் திருத்துறைப்பூண்டி பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வணிக சிலிண்டர் விற்பனையில் ஈடுபட்டது திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும், வீட்டு சிலிண்டரை இரும்பு கம்பியை பயன்படுத்தி அதனை வணிக சிலிண்டராக மாற்றியும், வீடுகளில் உள்ள சாதாரண சிறிய ரக சிலிண்டர்களை வணிக சிலிண்டரில் கியாஸ் நிரப்பி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து அவரிடம் இருந்து 36 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.