நெல்லை மாநகரில் 76 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி
நெல்லை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 76 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 76 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சதுர்த்தி
நெல்லை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக வடமாநில தொழிலாளர்கள் சார்பில் பாளையங்கோட்டை கிருபா நகரில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கி தங்களின் வீடுகள், கோவில் முன்பு உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். அதேபோல் கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் சார்பில் செய்யப்பட்ட சிலைகளை வாங்குவதற்காக இந்து அமைப்பினர் முன்பணம் கொடுத்து இருந்தனர்.
கோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசாயன கலவைகளால் சிலைகள் அனைத்தும் செய்யப்பட்டு இருப்பதாக கூறி அதிகாரிகள் அந்த சிலைகளை விற்பனை செய்ய தடைவிதித்து குடோனுக்கு சீல் வைத்தனர். இதனால் பா.ஜனதாவினர், இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சிலைகளை வழிபாட்டுக்கு எடுத்துச்செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனால் நேற்று முன்தினம் இரவு சிலைகளை இந்து அமைப்பினர் வாகனங்களில் எடுத்துச்சென்றனர்.
76 இடங்களுக்கு அனுமதி
நெல்லை மாநகரில் கடந்த ஆண்டு 76 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதேஇடங்களில் இந்த ஆண்டும் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதிதாக கூடுதல் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அந்த சிலைகளுக்கு அரசின் வழிகாட்டுதல்படி 24-ந் தேதி வரை போதிய வெளிச்சம் உள்ள இடங்களில் பாதுகாப்பான முறைகளில் பூஜைகள் செய்யப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளிலும் சிலைகள் வைத்து பூஜை செய்ய உள்ளனர். அந்த சிலைகள் வருகிற 24-ந் தேதி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.