இந்து மக்கள் கட்சி மாநாடு நடத்த அனுமதி -ஐகோர்ட்டு உத்தரவு
நிபந்தனைகளுடன் இந்து மக்கள் கட்சி மாநாடு நடத்த அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று (சனிக்கிழமை) கடலூரில் வள்ளலாரின் 200-வது பிறந்த தின நிகழ்ச்சியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சனாதன இந்து தர்ம எழுச்சிப்பேரணியும், மாலையில் மாநில மாநாடும் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சந்தோஷ் ஆஜராகி, ''கடலூர் ஆரிய வைசிய திருமண மண்டபம் முதல் மஞ்சக்குப்பம் திடல் வரையிலான சாலை போக்குவரத்துநெரிசல் உள்ள சாலையாகும். அங்கு ஆஸ்பத்திரி உள்ளதால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி செல்லும். பிற மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளதால், பேரணியில் ஏதாவது கோஷம் போட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதனால், அனுமதி வழங்க மறுக்கப்பட்டது'' என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதி, ''போலீசார் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றி மனுதாரர் கட்சி, மாநில மாநாட்டை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் நடத்திக்கொள்ளலாம். ஆனால்,பேரணி நடத்த அனுமதி வழங்க முடியாது'' என்று உத்தரவிட்டார்.