500 விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி - மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாமல்லபுரம் கடலில் 500 விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-08-31 09:26 GMT

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் போலீஸ் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மானாமதி, சதுரங்கப்பட்டினம், சுங்குவார்சத்திரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஊரப்பாக்கம், வண்டலூர், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், வாலாஜாபாத், படாளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, கோவில் அமைப்புகள், இளைஞர் மன்றங்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்படுகிறது.

அந்த பகுதிகளில் வைக்கப்படும் 500 விநாயகர் சிலைகளை அடுத்த மாதம் 4-ந்தேதி மாமல்லபுரம் கடலில் கரைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிலைகள் கரைக்க உள்ள மாமல்லபுரம் புறவழிச்சாலையில் உள்ள கடற்கரை பகுதிக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். யாரையும் கடலில் குளிக்க அனுமதிக்க கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் போலீசாரிடம் அறிவுறுத்தினார்.

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனப்படும் வேதிப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க அங்கு பாதுகாப்பில் இருக்கும் போலீசார் அனுமதி வழங்ககூடாது. அப்படி மீறி கொண்டுவரப்படும் சிலைகளை பறிமுதல் செய்யவும் போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். களிமண் சிலைகளை மட்டுமே கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டும்.

மாமல்லபுரம் நகர் பகுதியில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வர அனுமதிக்க கூடாது என்றும், வரையறுக்கப்பட்ட மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மட்டுமே விநாயகர் சிலைகளை கடலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

விநாயகர் சிலைகளை கொண்டு வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கு வசதியாக மாமல்லபுரம் புறவழிச்சாலை கடற்கரையில் தற்காலிகமாக அமைக்கப்படும் சிமெண்டு சாலை பணிகளையும் விரைந்து முடிக்க அவர் பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ், மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்