விதிமுறைகளை மீறி விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அனுமதி
கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், விவசாய நிலங்களை விதிமுறைகளை மீறி வீட்டுமனைகளாக மாற்ற அனுமதி கொடுப்பதாகவும் முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், விவசாய நிலங்களை விதிமுறைகளை மீறி வீட்டுமனைகளாக மாற்ற அனுமதி கொடுப்பதாகவும் முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
வீட்டுமனைகளாக மாற்ற அனுமதி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கல் குவாரிகளில் இருந்து கற்களை எடுத்து கேரளாவுக்கு அதிகமாக கடத்தி செல்கின்றனர். இதனால் கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் சேதமாகிறது. கேரளாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் கனிமவளங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்கிருந்து அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. எனவே கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தி செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய நிலங்கள் 3 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக இருப்பதாக சான்றிதழ் வாங்கி, வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் தென்னை மரங்களை வெட்டி அகற்றிய உடனே வீட்டுமனைகளாக மாற்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. சில இடங்களில் ஆயக்கட்டு பகுதிகளில் கூட இதுபோன்ற விதிமுறை மீறல் உள்ளது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்றில் கலக்கும் கழிவுநீர்
குளப்பத்துக்குளத்தில் மண் எடுக்க உரிய அனுமதி அளிக்க வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ளதால் மண் அள்ளினால் கூடுதலாக நீரை சேமித்து வைக்க முடியும். மேலும் ஆழியாறு அணையில் இருந்தும் மீண்டும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், கோட்டூர் ஆகிய பேரூராட்சிகளில் கழிவுநீர் ஆழியாற்றில் கலக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தேங்காய் கொள்முதல்
தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. எனவே பச்சை தேங்காயாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதலை நீட்டிக்க வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும்.
பழைய ஆயக்கட்டு வாய்க்கால்கள் மற்றும் மதகு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சேதமடைந்த ஊட்டுக்கால்வாயை சீரமைக்க வேண்டும். வாரிசு சான்றிதழை போலியாக தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்னா யானையால் விவசாய பயிர்கள் சேதமடைகின்றன. எனவே அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். ஆழியாற்றில் தண்ணீர் திருடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மனுக்களுக்கு உரிய பதில்
சப்-கலெக்டர் பிரியங்கா கூறுகையில், கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழியாறு அணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு வண்டல் மண் எடுக்கப்பட்டு உள்ளது. மீண்டும் அனுமதி கொடுக்க முடியாது. ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய பதில் கொடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நேர்முக உதவியாளர் அரசகுமார், முன்னாள் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் விவசாயிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.