ஜல் ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
ஜல் ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2019-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் நோக்கம் மாநில அரசுகளுடன் இணைந்து 2024-க்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலமாக குடிநீர் வழங்குவது ஆகும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் கிராமப்புற பெண்கள் குடிநீருக்காக குடங்களோடு வெகுதூரம் அலைய வேண்டிய நேரம் மிச்சப்படுத்தப்பட்டு, அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கவும், வருமானம் ஈட்டக்கூடிய வேலைகளை செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர்கள்
ஜல் ஜீவன் திட்டம் கிராமப்புறங்களில் சத்தமின்றி ஒரு மவுன புரட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், தவறான நீர்ப்பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் நீர்க்கசிவு மற்றும் அடைப்புகளை எளிதாக கண்டறிந்து, உடனடியாக அவற்றை சரிசெய்யவும் குடிநீர் குழாய்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. குடிநீருக்காக விதிக்கப்படும் கட்டணம், ஏழை எளியவர்களால் இயலக் கூடிய தொகையாக இருப்பதும் முக்கியம்.
சமீபத்தில் நடைபெற்ற ஜல் ஜீவன் திட்ட ஆய்வுக்கூட்டத்தில் உள்ளூர் நீர் ஆதாரம் நிலையாக உள்ள ஊரகப் பகுதிகளில் ஒற்றை கிராம திட்டங்களை செயல்படுத்தவும், உள்ளூர் நீர் ஆதாரங்கள் நிலைத்தன்மை இல்லாத இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில ஜல் ஜீவன் இயக்கத்தின் சார்பில் வீடுகளுக்கு பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள், ஒற்றை கிராம திட்டங்கள் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் கோடி அளவிற்கு 42 புதிய குடிநீர் திட்டங்களும், 56 குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதால், சில பெரிய கூட்டுக்குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி முடிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படுவதால் ஜல் ஜீவன் திட்டத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க ஜல் சக்தி துறை மந்திரிக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாநி அரசின் பங்களிப்பு
திருச்சி மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள 404 ஊராட்சிகளில் 2,210 குக்கிராமங்களில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 472 வீடுகள் உள்ளன. இந்த 2,210 கிராமங்களில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தனி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் சுத்தமான குடிநீர் வழங்குவது மற்றும் பள்ளிகள், அங்கன்வாடிகள், பொது நிறுவனங்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்படுகிறது. மத்திய அரசு 45 சதவீதம், மாநில அரசு 45 சதவீதம், பொது மக்களின் பங்களிப்பு 10 சதவீதம் என்று 100 சதவீதத்தில் இந்த திட்டம் செலுத்தப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 472 வீடுகளில் இந்த திட்டம் தொடங்கும் முன்பு 1 லட்சத்து 39 ஆயிரத்து 247 வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்புகள் இருந்தன. இவற்றில் முறைகேடாக இணைப்புகள் வைத்திருந்த 9,330 குடிநீர் இணைப்புகள் வரன்முறை படுத்தப்பட்டன.
ஜல்ஜீவன் திட்டம் குறித்து திருச்சி மாவட்ட மக்கள் என்ன கூறுகிறார்கள். இங்கே பார்ப்போம்.
கூடுதல் நேரம் வினியோகம்
திருப்பைஞ்சீலி அண்ணா நகரை சேர்ந்த வள்ளி:- திருப்பைஞ்சீலி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 90 சதவீத வீடுகளில் குடிநீர் இணைப்பு உள்ளது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு பெற்றால் குழாய் பதிப்பதற்கான செலவுகள் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் என்று சொல்கின்றனர். புதிதாக வீடு கட்டி குடிநீர் இணைப்பு பெறும் நபர்களுக்கு வேண்டுமானால் இந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்கலாம். ஆனால் பெரும்பாலான வீடுகளில் குடிநீர் இணைப்பு உள்ளது. தற்போது, ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இன்னும் கூடுதலான நேரம் தண்ணீர் வினியோகம் செய்தால் பொதுமக்களுக்கு பலன் உள்ளதாக அமையும்.
ஒரு கிலோ மீட்டர் தூரம்
தொட்டியம் ஒன்றியம் தோளூர்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி எஸ்.சரவணன்:-
தோளூர்பட்டி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து ஒருகிலோ மீட்டர் தூரம் சென்றால்தான் காவிரி குடிநீர் எங்களுக்கு கிடைக்கிறது. எனவே ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாடு இல்லை
துறையூரை அடுத்த கோட்டாத்தூரை சேர்ந்த ரஞ்சிதா:- வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் கோட்டாத்தூர் ஊராட்சியில் 240 வீடுகள் பயன் அடைந்துள்ளன. தினந்தோறும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. மின் மோட்டார் வைத்து உறிஞ்ச முடியாத அளவிற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பிரச்சினை குறைந்துள்ளது.
தா.பேட்டை ஒன்றியம் தேவானூர் புதூர் பகுதியை சேர்ந்த செல்வம்:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் இணைப்புகள் குறைவாக இருந்தது. தற்போது ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில்புதிதாக குழாய் அமைத்து குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளனர். தினமும் காலை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. வீட்டிற்கே நேரில் வருவதால் தண்ணீர் சுலபமாக கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.
வையம்பட்டி அருகே உள்ள தேக்கமலை கோவில்பட்டியை சேர்ந்து தமிழ்செல்வி:-
முன்பெல்லாம் பொது குடிநீர் குழாய் இருந்தது. தற்போது, ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அதிகமாக குடிநீர் வினியோகம் செய்தால் போதுமானதாக இருக்கும்.
40 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு
திருநெடுங்குளம் நரிக்குறவர் காலனி சேர்ந்த மாலினி:- எங்கள் பகுதியில் 40 ஆண்டு காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கே குடிநீர் வருகிறது. இதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
பழங்கனாங்குடி ஊராட்சி பூலாங்குடி காலனியை சேர்ந்த செபஸ்டி அம்மாள்:- ஜல் ஜீவன் திட்டம் மூலம் எங்கள் காலனி பகுதியில் உள்ள 1,188 குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்கிறது. இதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.