பாலியல் புகாரில் கைது: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணி இடைநீக்கம்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-07-26 22:23 GMT

பல்கலைக்கழக பதிவாளர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் கோபி. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் பல்கலைக்கழக பதிவாளராக (பொறுப்பு) இருந்தார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

சேலம் சித்தர்கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பல்கலைக்கழக வேதியியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பல்கலைக்கழக விடுமுறை நாளான கடந்த 24-ந் தேதி பதிவாளர் கோபி, மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு ஆராய்ச்சி பாடம் தொடர்பாக சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதாக கூறி மாணவியை குடியிருப்புக்கு அழைத்து உள்ளார்.

கைது

இதை நம்பிய மாணவி, பதிவாளர் வசித்து வந்த குடியிருப்புக்கு சென்றார். அப்போது பதிவாளர் கோபி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி கருப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பதிவாளர் கோபியை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பணி இடைநீக்கம்

இந்த நிலையில் பதிவாளர் கோபி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்ணன், கதிரவன், முருகன் ஆகிய 3 பேரை நியமித்து, துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பாலியல் புகாரில் சிக்கி கைதான பதிவாளர் கோபியை நேற்று இரவு பணி இடைநீக்கம் செய்து, துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்