பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தகுறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்
பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
பெரியகுளம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் ஆர்.டி.ஓ. கலந்து கொள்ளவில்லை என்று கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ. வந்தால் தான் கூட்டம் நடத்த வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தை ஒத்தி வையுங்கள் என்று பேசினர். பின்னர் நேர்முக உதவியாளர் பேசியதை தொடர்ந்து சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அப்போது ஜங்கால்பட்டியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தாமரைக்குளம் கண்மாயை தூர்வாரி, உடைந்த பாசன வாய்க்காலை சரி செய்ய வேண்டும். சோத்துப்பாறை புது வாய்க்காலில் மண் அதிகளவில் படிந்ததால் தண்ணீர் கடந்த 10 வருடங்களாக வருவதில்லை.
விவசாயிகள் புகார்
இதனால் கைலாசநாதர் கோவில் முன்பகுதியில் உள்ள 150 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது. கண்மாயில் படிந்துள்ள மண்ணை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய நேர்முக உதவியாளர் ஆர்த்தி, அடுத்த கூட்டத்திற்கு வரும்போது தற்போது விவசாயிகள் கூறிய கோரிக்கைகள் குறித்து உரிய பதில் அளிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில் கலந்து கொண்ட அலுவலரிடம் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு போதிய இருக்கை வசதி செய்து செய்யப்படாததால் அவர்கள் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.