பெரியகுளம் அரசு தோட்டக்கலை பண்ணையில்26 லட்சம் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி
தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் சாகுபடியை பெருக்கும் வகையில் பெரியகுளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் 26 லட்சம் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்தார்.
வீரிய காய்கறி நாற்றுகள்
தேனி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் 2023-24-ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் போன்ற வீரிய காய்கறி நாற்றுகள் 40 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது.
மாவட்டத்தில் 175 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கான நாற்றுகள் வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு எக்டேருக்கு 15 ஆயிரம் நாற்றுகள் வீதம் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 4 எக்டேர் வரை மானியம் வழங்கப்படும்.
26 லட்சம்
விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களுக்கு 26 லட்சத்து 25 ஆயிரம் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 'TN-HORTNET' என்ற வலைத்தளத்தில் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து, நில ஆவணங்கள், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.