பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
தொடர் மழை
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதே போல நேற்றும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மலையோர பகுதி மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழையாக நீடித்தது.
நாகர்கோவிலில் சாரல் மழையாகவும், சிறிது நேரம் பலத்த மழையாகவும் இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் நேற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
குளச்சலில் அதிகபட்ச பதிவு
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக குளச்சலில் 84.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல பூதப்பாண்டி-2.2, கன்னிமார்-2.2, நாகர்கோவில்-2, புத்தன்அணை-3, சுருளகோடு-2, தக்கலை-3.2, இரணியல்-6.4, பாலமோர்-2.6, கோழிப்போர்விளை-6.2, அடையாமடை-2.4, குருந்தன்கோடு-3.6, முள்ளங்கினாவிளை-12.6, ஆனைகிடங்கு-2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
மேலும் அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-6, பெருஞ்சாணி-6.6, சிற்றார் 1-3, சிற்றார் 2-5.6, மாம்பழத்துறையாறு-3, முக்கடல்-1.7 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைக்கு நீர்வரத்து
மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 2,198 கனஅடி தண்ணீர் வந்தது.
இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,040 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 79 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 115 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 10 கனஅடியும் தண்ணீர் வந்தது.
திற்பரப்பில் குளிக்க தடை
அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 488 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் பாசன கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 57 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 4 ஆயிரத்தை கடந்து உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீரின் அளவு பேச்சிப்பாறை அணையில் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தண்ணீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், கோதையாற்றிலும் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.