விருதுநகர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு மனுக்களோடு மக்கள் இயக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்துவேல், நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தின் போது மாநிலக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தேனி வசந்தன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தில் அரசு மற்றும் கோவில் நிலங்களில் குடியிருப்பவருக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். சொந்த நிலமும் வீடும் இன்றி வாழும் அனைவருக்கும் வீட்டுமனையும், வீடு கட்டியும் தர வேண்டும். 60 வயதான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தகுதியுள்ள விதவை மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.