தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்கள் வேதனை -ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியில் மக்கள் எண்ணிலடங்கா வேதனைகளை அனுபவித்து உள்ளனர் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2023-05-07 23:10 GMT

சென்னை,

சாத்தியமற்ற வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக 'திராவிட மாடல்' என்ற போர்வையில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா! வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஒருபுறம் என்றால், வாக்குறுதிகளுக்கு முரணான செயல்பாடுகள் மறுபுறம். தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் படும் அல்லல்களில் முக்கியமானவற்றை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

* ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. ஆட்சிக்கு வந்தவுடன் இதை நிறைவேற்றிய தி.மு.க. அரசு, இதனை ஈடு செய்யும் வகையில், ஒரு சில மாதங்களிலேயே ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 அளவுக்கு உயர்த்தியது. இதேபோன்று ஆவின் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் போன்றவற்றின் விலையையும் உயர்த்தியுள்ளது. ஆவின் வெண்ணெய்க்கு இன்று மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. ஆவின் பொருட்கள் தாராளமாக கிடைப்பதில்லை. ஆவின் பால் வினியோகம் வெகுவாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. பாலுக்கான கொள்முதல் உயர்த்தப்படவில்லை. மொத்தத்தில் ஆவின் நிறுவனத்தின் கதி அதோகதி.

தமிழ்நாட்டுக்கு துரோகங்கள்

* ஒரே கையெழுத்தில் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என்று மேடைக்கு மேடை தி.மு.க.வினரால் முழங்கப்பட்டது. இந்த வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிட்டது.

* சமையல் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு தி.மு.க. எண்ணற்ற துரோகங்களை தமிழ்நாட்டிற்கு இழைத்து இருக்கிறது

இதற்கெல்லாம் காரணம் கேட்டால் 'கடன்', 'நிதிப் பற்றாக்குறை' எனச் சொல்லும் தி.மு.க. அரசு, கடலில் பேனா திட்டத்தை அமல்படுத்த துடிப்பது சுயநலத்தின் உச்சகட்டம். பொது நலத் திட்டத்தை நிறைவேற்ற பணமில்லாத நிலையில் தன்னலத் திட்டம் எதற்கு என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

வன்முறை களம்

ஜெயலலிதா வகுத்துத் தந்த அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாடு செல்கிறதா? என்றால் அதுவும் இல்லை. சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அன்றாடம் கொலைகளும், கொள்ளைகளும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. மணல், ரேஷன் பொருட்கள் கடத்தல் அமோகமாக நடைபெற்று வருகின்றன. வன்முறைக் களமாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. பூரண மதுவிலக்கு என்று சொல்லிவிட்டு, பார்கள் மூலமும், தானியங்கி எந்திரங்கள் மூலமும் 'டாஸ்மாக்' வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.தமிழர்களின் நலன்கள், உரிமைகளை காக்க 'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் வளமான பொது அறிவை பெற்றவர்கள். அவர்களுக்கு வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? என்ற வித்தியாசம் தெரியும். தமிழர்கள் தங்களுடைய மனக்குமுறலை தி.மு.க. அரசுக்கு வெளிப்படுத்தும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்