10 ஆண்டுகளாக பஸ்வசதி இல்லாமல் அல்லல்படும் மக்கள்

திண்டிவனம் அருகே பழுதடைந்த சாலையால் 10 ஆண்டுகளாக பஸ்வசதி இல்லாமல் அல்லல்படும் மக்கள்

Update: 2023-05-31 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனத்தில் இருந்து வெள்ளிமேடு பேட்டை செல்லும் சாலையில் கோவிந்தாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராண்டிபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மாணவர்கள் படிப்பதற்கு இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருவம்பாக்கம் அரசு பள்ளிக்குத்தான் சென்று வர வேண்டும். அதேபோல் கல்லூரி, மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கும் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிந்தாபுரம் பஸ் நிறுத்தம் வந்துதான் செல்ல வேண்டும்.

ஆனால் கோவிந்தாபுரத்தில் இருந்து கிராண்டிபுரத்துக்கு செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து மேடு, பள்ளமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சில மாணவர்கள் மற்றும் முதியோர் அருகில் உள்ள வயல்வெளி பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். மழை காலங்களில் இந்த சாலையில் செல்லவே முடியாத நிலை உள்ளது. சாலை பழுதடைந்துள்ளதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன வசதி இல்லாதவர்கள் கிராமத்தில் இருந்து 3 கிலோ மீ்ட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமபந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த சாலையை சீரமைத்து பஸ்வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்