மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தை சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
இ-சேவை மையம்
தமிழக அரசு கிராம தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில் இ-சேவை மையம் இயக்க உரிமம் வழங்கப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற அரசு விதிகளின் படி https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்கள் 12- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டமைப்பு வசதிகள்
கணினி பற்றிய விவரங்களும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-சேவை மைய கட்டிடம் 100 சதுரமீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் கட்டாயமாகும். தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் மையம் அமைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின் படி இயக்குதல் வேண்டும் ஆகியவை இ-சேவை மையம் அமைக்க தகுதிகளாகும். தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி. எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். எனவே படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் வைத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.