புத்தாண்டையொட்டி திற்பரப்புக்கு படையெடுத்த மக்கள் அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும் உற்சாகம்

ஆங்கில புத்தாண்டையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். படகு சவாரி செய்தும் குதூகலம் அடைந்தனர்.

Update: 2023-01-01 18:45 GMT

திருவட்டார்:

ஆங்கில புத்தாண்டையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். படகு சவாரி செய்தும் குதூகலம் அடைந்தனர்.

திற்பரப்பு அருவி

ஆங்கில புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்தனர். அவர்கள் 'குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிலர் அங்குள்ள நீச்சல் குளத்திலும் குளித்தனர்.

பின்னர் அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

உடை மாற்ற காத்திருந்த பெண்கள்

அதே சமயம் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப பெண்கள் உடை மாற்றும் அறை போதிய அளவில் இல்லை. இதனால் அருவியில் குளித்து விட்டு வந்த பெண்கள் உடைமாற்ற அறையின் வெளியே வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இங்கு பெண்கள் உடைமாற்ற கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

பின்னர் அவர்கள் அருவியின் மேல் பகுதியில் அணைக்கட்டில் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் படு ஜோராக நடந்தது. நேற்று பஸ், வேன், கார்களில் ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாத்தூர் தொட்டிப்பாலம்

இதேபோல் மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்தனர். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் 1,240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்டது. மாத்தூர் தொட்டிப்பாலத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைவரை நடந்து செல்வது ஒரு திரில்லிங்கான அனுபவம் ஆகும். இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர்.

பின்னர் பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர். அருகில் உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்