போகி பண்டிகைக்கு எரிக்காமல் 60 டன் குப்பைகளை ஒப்படைத்த மக்கள்
திண்டுக்கல் மாநகராட்சியில் போகி பண்டிகைக்கு எரிக்காமல் 60 டன் குப்பைகளை பொதுமக்கள் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தினமும் சராசரியாக 90 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. ஒருசில நாட்களில் 110 டன் குப்பைகள் சேர்ந்துவிடுகின்றன. இந்த குப்பைகளை வீடு, வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். பின்னர் அவை உரப்பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு முந்தைய நாள் போகி பண்டிகை ஆகும். இதையொட்டி பழைய கழிவுகள், குப்பைகளை தீவைத்து எரிக்காமல் உரப்பூங்கா மற்றும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கும்படி ஆணையர் சிவசுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி 60 டன் குப்பைகளை எரிக்காமல் மக்கள் தாமாக முன்வந்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் போகி பண்டிகைக்கு திண்டுக்கல் நகரில் குப்பைகளை எரிப்பது பெருமளவில் குறைந்தது. இதுதவிர பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு மறுநாள் வழக்கம் போல் 90 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.