உறவினர்கள், ஊர் மக்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி ஒடிசா ரெயில் விபத்தில் தப்பிய ராணுவ வீரர் உருக்கம்

உறவினர்கள், ஊர் மக்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி என ஒடிசா ரெயில் விபத்தில் தப்பிய ராணுவ வீரர் உருக்கமாக கூறினார்.

Update: 2023-06-04 19:15 GMT

உறவினர்கள், ஊர் மக்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி என ஒடிசா ரெயில் விபத்தில் தப்பிய ராணுவ வீரர் உருக்கமாக கூறினார். 

ரெயில் விபத்து

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை நெஞ்சை பதப்பதைக்க வைத்த ரெயில் விபத்து நடந்தது. இந்த விபத்தில் 3 ரெயில்கள் மோதி 250-க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசாவில் விபத்துக்கு உள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் வெங்கடேசன்(வயது39) என்பவர் பயணம் செய்துள்ளார்.

மின்கம்பம் மீது மோதிய பெட்டி

கொல்கத்தாவில் தேசிய பேரிடர் மீட்பு படையில் வீரராக பணியாற்றி வரும் இவர், உறவினர் இல்ல திருமணத்துக்காக கொல்கத்தாவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டார். கோர விபத்தில் சிக்கிய அந்த ரெயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் (எஸ்-7) வெங்கடேசன் பயணம் செய்தார். விபத்தின்போது அவர் பயணம் செய்த பெட்டி ஒரு மின்கம்பத்தின் மோதி அப்படியே நின்று விட்டது. ஆனால் பெட்டியில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனால் அதிர்ஷ்டவசமாக தப்பிய வெங்கடேசன், மீட்பு ரெயில் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து சோழன் விரைவு ரெயிலில் நேற்று மதியம் பாபநாசம் வந்தார். அப்போது அவரை உறவினர்கள் ஆரத்தழுவி, வரவேற்பு அளித்தனர்.

ஆரத்தி எடுத்தனர்

அங்கிருந்து அவருடைய சொந்த ஊரான நாயக்கர்பேட்டைக்கு சென்றார். அப்போது வெங்கடேசனை, அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், 'இவ்வளவு பெரிய விபத்து நடைபெற்றது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தார்களையும், உறவினர்களையும், ஊர் மக்களையும் மீண்டும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என உருக்கத்துடன் கூறினார். வெங்கடேசனுக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒருமகன், ஒரு மகள் உள்ளனர். விபத்தில் இவர் உயிர் பிழைத்தது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்