பொள்ளாச்சியில் சுரங்கப்பாதையில் மதுப்பிரியர்கள் தொல்லையால் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள்-போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சியில் உள்ள சுரங்கப்பாதையில் மதுப் பிரியர்கள் தொல்லை யால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

Update: 2023-02-24 18:45 GMT

பொள்ளாச்சி, பிப்.25-

பொள்ளாச்சியில் உள்ள சுரங்கப்பாதையில் மதுப் பிரியர்கள் தொல்லை யால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

மதுபிரியர்கள் தொல்லை

பொள்ளாச்சி பழையபஸ் நிலையத்தில் கோவை, பொள்ளாச்சி, பழனி, திருப்பூர், பல்லடம், ஈரோடு, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து வால்பாறை, கேரளா மாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 2 பஸ்நிலையத்தில் இருந்து வெளியே வரும் பயணிகள் ரோட்டை கடக்கும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்க பாதையை பழைய பஸ் நிலையத்திற்கு வருபவர்களும், பஸ் நிலையம் எதிரில் உள்ள பகுதிக்கு செல்ல விரும்பும் பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சுரங்கப்பாதை உள்ளே நடைபாதை கடைகள் இருப்பதோடு, மதுபிரியர்களும் குடித்துவிட்டு படுத்து விடுகின்றனர். சில காதல் ஜோடிகள் சேர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கும் சம்பவம் நடைபெறுவதால், இவை சுரங்க பாதையில் இறங்கி நடந்து வரும் பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.

போக்குவரத்து நெருக்கடி

இதனால் பெரும்பாலான பயணிகள் சுரங்கப் பாதையில் இறங்காமல் மீண்டும் பழைய பஸ் நிலையம் செல்ல ரோட்டை கடந்து செல்கின்றனர். இதனால் பொள்ளாச்சி பஸ் நிலையம் முன்பு காலை, மாலை நேரங்களில் பயணிகள் சுரங்க பாதையில் நடந்து செல்லாமல் ரோட்டை கடந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஒருசில நேரங்களில் விபத்துகளும் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சுரங்கப்பாதையில் நடந்து வரும் போது அங்கு போதுமான வெளிச்சம் இல்லை. மதுபிரியர்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முகம் சுளிக்கும் அளவில் நடந்து கொள்கின்றனர். இதனால் சுரங்க பாதையை பயன்படுத்த சிரமமாக உள்ளது. சுரங்கப்பாதை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு குடிகாரர்கள், பள்ளி மாணவர்கள், ஊசி பாசி விற்பவர்கள் உள்ளே அனுமதிக்காமல் போதிய மின் விளக்கு வசதி அமைத்தால் சுரங்கப் பாதையை பயன்படுத்த ஏதுவாக இருக்கும். அதனால் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்