போதிய வசதிகள் இல்லாததால் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் மக்கள்

போதிய வசதிகள் இல்லாததால் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-10-08 19:36 GMT

போதிய வசதிகள் இல்லாததால் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அதிராம்பட்டினத்தை சுற்றி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நகராட்சி மற்றும் கிராமங்களில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியை சேர்ந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டி உள்ளது. ஆனால் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் பகல், இரவு நேரங்களில் நிரந்தரமாக டாக்டர்கள் பணியில் இல்லாததால், மக்கள் முறையான சிகிச்சை பெற முடியாமல் அல்லல்படுகின்றனர்.

விபத்துகள்

இங்கு உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதில் காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதியும் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் இல்லை. இங்கு ரத்த வங்கி செயல்படாததால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதய நோய்களுக்கான சிறப்பு டாக்டரும் பணி அமர்த்தப்படவில்லை.

இங்கு பணியாற்றி வரும் மகப்பேறு டாக்டர், பொதுநல டாக்டர் ஆகிய இருவருமே வாரத்தில் சில நாட்கள் மட்டுமே ஆஸ்பத்திரியில் பணிபுரிகின்றனர். இதனால் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவது அடிக்கடி நடக்கிறது.

பிரசவ வலியுடன் வரும் கர்ப்பிணிகள் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பூட்டிக்கிடக்கும் அறுவை சிகிச்சை அரங்கு

அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கு தற்போது பூட்டப்பட்டு கிடக்கிறது. ஜெனரேட்டர் பழுதடைந்து பல மாதங்களாகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் பெரும்பாலும் பணியில் இருப்பதில்லை. ஆஸ்பத்திரி வளாகத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தின் அருகே பச்சிளம் குழந்தைகள் வார்டு உள்ளது. உயிர் காக்க வேண்டிய அரசு ஆஸ்பத்திரி, உயிர் பலி வாங்கும் இடமாக மாறி வருகிறது. எனவே இங்கு மகப்பேறு மற்றும் பொது மருத்துவத்துக்காக போதிய டாக்டர்களை நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும். தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்