தேர் செல்ல பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி
கடலூர் செடல் செங்கழணி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேர் செல்ல பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயன்றனா்.
கடலூர்:
கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி செடல் செங்கழணி மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் தேர்த் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக மாரியம்மன் கோவில் தெருவில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் தேர் செல்ல ஏதுவாக பாதை அமைத்துத்தர வேண்டும் என்று துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஒன்று திரண்டு சாவடி சாலையில் மறியல் செய்ய முயன்றனர். தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேர் செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என்றனர். இதை கேட்ட போலீசார், இது பற்றி நாளை (இன்று) சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, இடத்தை அளந்து, பாதை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதை கேட்ட அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.