பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க புதுக்கோட்டையில் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளாம் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் தயாராக உள்ளனர். பல இடங்களில் சமுதாய பொங்கல், சமத்துவ பொங்கல் கடந்த ஓரிரு நாட்களாக கொண்டாடப்பட்டன.
இதேபோல அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், போலீஸ் துறை சார்பிலும் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிலையில் வீடுகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளை சுத்தம் செய்து பொதுமக்கள் தயாராக வைத்துள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகையில் முதன்மையானதாக கருதப்படும் கரும்பினை தங்கள் தேவைக்கேற்ப வாங்கி சென்றனர்.
மக்கள் கூட்டம்
புதுக்கோட்டையில் தெற்கு ராஜ வீதி, சந்தைபேட்டை பகுதிகளில் கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மஞ்சள் குலை, காய்கறிகள், தேங்காய், வாழைப்பழம், சூடம், பத்தி உள்பட பூஜைக்கான பொருட்களை வாங்கி சென்றனர். பண்டிகையையொட்டி பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதேபோல கரும்புகள் ஆங்காங்கே சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு விற்பனையானது. பொங்கல் வியாபாரம் களை கட்டியது.
பஸ் நிலையம்
இதேபோல பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். வெளியூர்களில் இருந்தும் பலர் தங்களது சொந்த ஊருக்கு வந்தனர். கிராமப்புறங்களில் இருந்து புதுக்கோட்டை டவுன் பகுதிக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகம் வந்ததால் டவுன் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது.
கறம்பக்குடியில் விற்பனை களை கட்டியது
கிராமங்கள் சூழ்ந்த பகுதியான கறம்பக்குடியில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, கரும்பு, மஞ்சள், வாழை போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதை தவிர மண்பானை, காவிக்கட்டி, ஆப்பை, கயிறு வளையம், முறம் போன்றவை இங்கு தயாரிக்கப்படுகின்றன. இதனால் பொங்கல் விழாவிற்கு 10 நாட்கள் முன்பே கறம்பக்குடியில் பொங்கல் சந்தை தொடங்கிவிடும். நேற்றைய சந்தையில் பொங்கல் பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மண்பானைகள் வாங்க நகர பகுதி பொதுமக்களும் ஆர்வம் காட்டினார்கள். குக்கர் மற்றும் பித்தளை பானைகளில் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர் கூட தற்போது மண்பானைகளை வாங்கி சென்றதாக மண்பாண்ட வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மண்பானைகள், சட்டிகள் போன்றவை அதிக அளவில் விற்பனை ஆகின. இதேபோல் கிராம பகுதிகளில் வீட்டின் முன்பு காவி கோலம் போடுவது, வெள்ளை, காவி வண்ணம் பூசுவது வழக்கம் என்பதால் காவி கட்டிகளும் நன்கு விற்பனை ஆனது. கொப்பி பொங்கலுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் மூங்கில் கூடை, முறம், மாடு அலங்கார பொருட்கள் என பல்வேறு பொருட்களின் விற்பனையும் களைகட்டியது.
பொன்னமராவதி
பொன்னமராவதி அண்ணா சாலை, சந்தை வீதி, பஸ் நிலைய வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான பொதுமக்கள் மஞ்சள் குலை, தேங்காய், பழங்கள், காய்கறிகள், பானை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர்.