நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க அலைமோதிய மக்கள்

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடு, கோழி இறைச்சிகளை நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

Update: 2023-01-16 18:45 GMT

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடு, கோழி இறைச்சிகளை நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

மீன்கள் வாங்க அலைமோதிய கூட்டம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. மறுநாளான நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனால் வீட்டு குல தெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும், மீன், ஆட்டிறைச்சி, கருவாடு, முட்டைகள் வைத்து படையலிடுவது மக்களின் வழக்கம்.

இதற்காக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வியாபாரிகள்

வேதாரண்யம், காரைக்கால், திட்டச்சேரி, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.

வஞ்சரம், வவ்வால், இறால், சுரும்பு, பாறை, வாலை, செங்காலா நண்டு,கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன.

மீன்கள் விலை உயர்வு

மீன்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 1 கிலோ ரூ.550-க்கு விற்ற வஞ்சிரம் நேற்று ரூ.700-க்கு மேல் விற்கப்பட்டது.

ரூ.500-க்கு விற்ற இறால் ரூ.700-க்கும், ரூ.800-க்கு விற்ற வெள்ளை வவ்வால் ரூ. 950-க்கும், ரூ.650-க்கு விற்ற நண்டு ரூ.750-க்கும், ரூ.300-க்கு விற்ற சீலா மீன் ரூ.350-க்கும், கருப்புவாவல் ரூ.550-க்கும், பாறை ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

இதேபோல் நாகை ஆசாத் மார்க்கெட், பாரதிமீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

நீண்ட வரிசையில் நின்று இறைச்சிகளை வாங்கி சென்றனர். ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக மீ்ன்பிடி துறைமுகம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோடியக்கரை

இதேபோல் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் மீன்கள் வாங்க வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை இரு மடங்காக உயர்ந்தது.

இருப்பினும் அசைவப்பிரியர்கள் விலையை பொருட்படுத்தாமல் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலைமீன், வாவல் மீன், நண்டு, இறால் உள்ளிட்டைவைகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

மீனவர்கள் மகிழ்ச்சி

வழக்கமாக கோடியக்கரையில் இருந்து நாள்தோறும் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பன் மற்றும் காசிமேடு பகுதியில் இருந்து 5 டன் வாலை மீன்களை இறக்குமதி செய்தனர்.

இறக்குமதி செய்யப்பட்ட வாலை மீன் ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் மீன்கள் வாங்கி சென்றதாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்