அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்
அன்னோடை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.
கோத்தகிரி
அன்னோடை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.
சுத்தமான குடிநீர்
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட ஓரசோலை அருகே அன்னோடை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.
இந்த கிராமத்திற்கு அமைக்கப்பட்ட சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஏற்கனவே வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள நிலையில், ஆங்காங்கே புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து அவற்றின் புகலிடமாக மாறி வருகிறது. மேலும் சுத்தமான குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள்
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் எந்தவித அடிபப்டை வசதிகளும் இல்லை. உயரமான பகுதியில் இருந்து வரும் ஊற்று நீர்தான் குடிநீர் உள்ளிட்ட தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த நீரை தேக்கி வைக்க கடந்த 2006-ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை தூர்வாரப்படவில்லை. மேலும் அந்த நீரில் துணிகளை துவைப்பது, கழிவுநீரை விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. வேறு வழியின்றி அந்த நீரை பயன்படுத்தி வருகிறோம்.
சாலை மறியல்
இதேபோன்று தொடந்து சிறுத்தை உலா வருவதுடன், கால்நடைகளை தாக்கி கொன்று வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் கூட சேகர் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் சிறுத்தை எப்போது தாக்குமோ? என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு சிறுத்தையின் நடமாட்டதை கண்டறிந்து, கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.
மேலும் கிராமத்தை சுற்றி வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். இது தவிர குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஓரசோலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.