குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் மக்கள்

விருத்தாசலம் 10-வது வார்டில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறாா்கள்.

Update: 2022-12-13 18:45 GMT

விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் குறைகள், அடிப்படை வசதிகள் இல்லாத வார்டு உண்டா? என்று கேட்டால் இல்லை என்றே மக்கள் கூறுகிறார்கள். எனவே வார்டில் உள்ள குறைகள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு வார்டுக்கு சென்று அலசி வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் 10-வது வார்டில் உள்ள குறைகள் குறித்து பார்ப்போம்.

பன்றிகளுக்கு வரப்பிரசாதம்

விருத்தாசலம் 10-வது வார்டில் சக்தி நகர், நேரு வீதி, திலகர் வீதி, நேதாஜி வீதி, கண்ணபிரான் வீதி, வள்ளலார் வீதி, கோவிந்தராஜுலு வீதி, பாரதி வீதி, இளங்கோ சாலை, மகாத்மா காந்தி வீதி உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளன.

இளங்கோ சாலையில் மக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி, பராமரிப்பின்றி கிடக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தொட்டி இருக்கு, ஆனால் குடிநீர் வராது. மக்களுக்கு பயன்படாமல் வெறும் காட்சி பொருளாகவே குடிநீர் தொட்டி மாறி இருக்கிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதி அடைகிறார்கள்.

இதேபோல வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வடிந்து செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளின் ஓரத்திலும், சாலையிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது பன்றிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த கழிவுநீரில் குதூகலமாக குளிப்பதோடு, குடியிருப்புகளை சுற்றி வந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

காட்சிபொருளான குடிநீர் தொட்டி

கோவிந்தராஜுலு தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை சேதம் அடைந்துள்ளது. சில இடங்களில் இரண்டாக பிரிந்து காணப்படுவதால் அந்த தெரு வழியாக வாகனங்களில் செல்லவே அச்சப்படுகிறார்கள். மேலும் மக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியும் பயன்பாடின்றி காட்சி பொருளாக இருக்கிறது. அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அள்ள நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சரியாக வருவதில்லை என்ற புகாரையும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

புகார்களை அடுக்கும் மக்கள்

திலகர் வீதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். பாரதி தெருவில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும், வள்ளலார் வீதியில் வடிகால் வசதி அமைக்க வேண்டும், கோவிந்தராஜுலு வீதியில் சிமெண்டு சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும், மாரியம்மன் கோவிலில் வடிகால் வசதி தேவைப்படுகிறது. இது தவிர இளங்கோவடிகள், கோவிந்தராஜுலு தெரு, பாரதி தெரு ஆகிய வீதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே ஓங்கி எழுகிறது. அதுமட்டுமின்றி அடிக்கடி திருட்டு, கொள்ளை சம்பவம் அரங்கேறி வருகிறது. எனவே குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். தெருக்களில் சுற்றி வரும் நாய்களையும், பன்றிகளையும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அங்குள்ள மக்கள் அடுக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

தார் சாலை மண் சாலையானது

இந்த வார்டில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் இதோ...

திலகர் வீதி பாபு:- திலகர் வீதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை சேதமடைந்து தற்போது மண்சாலையாக மாறிவிட்டது. கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் தேங்கி நிற்கிறது. கழிவு நீர் முறையாக செல்வதற்கு வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழை நீரும், கழிவுநீரும் சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்து விடுகிறது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால், இப்பகுதி நகராட்சிக்குட்பட்ட பகுதி இல்லை என்று கூறுகிறார்கள். கழிவுநீர் பிரச்சினைக்கு கடந்த 10 ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

சாலை அமைக்கும்போது...

கோவிந்தராஜுலு வீதி சக்திபாலன்:-

இந்த பகுதியில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்துக்கொண்ட செல்கிறது. தெருவில் நடந்து செல்பவர்களை துரத்தி, துரத்தி சென்று கடிக்கிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். குப்பைகளை தினமும் அள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர் கால்வாய்களை உடனுக்குடன் தூர்வாரி தர வேண்டும். தெருக்களில் சாலை போடும்போது, ஏற்கனவே போடப்பட்ட சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்க வேண்டும். அதன்பிறகு அதில் சாலை அமைக்க வேண்டும். ஏற்கனவே போட்டு இருக்கும் சாலைமேல், மீண்டும் சாலை அமைத்தால் வீடுகள் பள்ளமாகி விடுகிறது. எனவே ஏற்கனவே இருக்கும் மட்டத்தை விட மேம்படுத்தாமல் இருக்கும் சாலையை அதே நிலையில் தான் மேம்படுத்த வேண்டும். சாலையை உயரம் தூக்கி அமைத்தால் மழைக்காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடும். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க...

நேரு வீதி சண்முகவள்ளி:-

எங்கள் பகுதியில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் கழிவு நீர் கால்வாய் குறுக்கிடும் இடங்களில் அமைக்கப்பட்ட சிறு பாலங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை உடனடியாக அகற்றி விட்டு புதிய பாலம் அமைத்து தர வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்