குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி
குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வனப்பரப்புகள் அழிக்கப்பட்டு தைலமரங்கள், முந்திரி மரங்கள் பயிரிடப்பட்டுள்ளதால் வனப்பகுதியில் வாழ்ந்த குரங்கு, மான் போன்ற வன விலங்குகள், மயில்கள் போன்ற பறவைகளும் கடந்த சில ஆண்டுகளாக உணவுக்காகவும் தண்ணீர் தேவைக்காகவும் கிராமங்களுக்குள் நுழைந்துவிட்டது. இதேபோல தான் குரங்குகள் கிராமங்களுக்குள் நுழைந்து வீடுகளில் உள்ள பொருட்களை அள்ளி வீசுவதுடன், ஆட்களையும் கடித்து அட்டூழியம் செய்து வருகிறது. இதேபோல கடந்த சில நாட்களாக கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வடக்கு கிராமத்திற்கு வந்துள்ள ஏராளமான குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. சில வீடுகளில் குரங்குகளுக்கு பயந்து கதவுகளை திறக்காமல் உள்ளனர். அதனால் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிகளில் கொண்டு விட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.