அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி
திருமருகல் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிக்கடி மின்தடை
திருமருகலை அடுத்த கீழக்கரையிருப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையம் மூலம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள 50 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மின்கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுந்து விடுவதால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
பணிகள் பாதிப்பு
இதனால் குறைந்த மின்அழுத்தம் காரணமாக வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. இதன் காரணமாக திருமருகல் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் திருமருகல் அரசு ஆஸ்பத்திரி, வேளாண்மை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் அனைத்து அரசு அலுவலகம், போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வெயில் சுட்டெரிப்பதால் மின்விசிறி இல்லாமல் வீடுகளில் இருக்க முடியவில்லை. ஆனால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நடவடிக்கை
எனவே திருமருகல் பகுதிகளில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை புதிதாக மாற்றியமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.