18 மாத ஆட்சியில் தி.மு.க.வை மக்கள் வெறுக்க தொடங்கி விட்டனர் -ஆர்.பி.உதயகுமார் பேச்சு

18 மாத ஆட்சியில் தி.மு.க.வை மக்கள் வெறுக்க தொடங்கி விட்டனர் என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Update: 2022-12-28 21:12 GMT

வாடிப்பட்டி, 

18 மாத ஆட்சியில் தி.மு.க.வை மக்கள் வெறுக்க தொடங்கி விட்டனர் என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மக்கள் வெறுப்பு

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஜெயலலிதா பேரவை சார்பாக நடைபெறும் சமத்துவ சமுதாய திருமண விழாவிற்கு அழைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம். எல்.ஏ. பேசியதாவது:-

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 18 பேர் குழு கொண்ட பூத் கமிட்டியை முழுமையாக வடிவமைக்க தகுந்த அறிவுரையை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக அதிகமாக இருக்கிறோம். நாம் போட்டியிட்டால் அதிக அளவில் வெற்றி பெறலாம். அதேபோல் கட்சி பொன்விழா ஆண்டையொட்டி மிகப்பெரிய மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த 18 மாத ஆட்சியில் தி.மு.க.வை மக்கள் வெறுக்க தொடங்கிவிட்டனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் தான் கொடுக்க உள்ளார். எதிர்க்கட்சிதலைவராக இருந்தபோது சொல்வதற்கு மனம் இருந்தது, ஆனால் தற்போது செய்ய மனமில்லை. இந்த அரசின்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் வேதனையில் இருக்கிறார்கள். சொத்து வரி, மின் கட்டணஉயர்வு, விவசாயிகள் பிரச்சினையாகி விட்டது. இதுகுறித்து சட்டமன்ற கூட்ட தொடரில் எடப்பாடி பழனிசாமி குரல்கொடுப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையையொட்டி எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்திடம் அரசின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி, சலுகை அளவில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்படும். ஆனால் தற்போது பண்டிகை காலத்தில் ஆம்னி பஸ் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சி

நிச்சயம் வருகின்ற தேர்தல் காலங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி வாகை சூடும். மீண்டும் தமிழகத்தில் அவரது தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்றார்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், செந்தாமரை கண்ணன், அம்மா சேரிடபுள் டிரஸ்ட், கோட்டைமேடு பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்