பொதுமக்கள் குப்பைகளை தீ வைத்து எரிக்கக்கூடாது

போகி பண்டிகையையொட்டி பொதுமக்கள் குப்பைகளை தீ வைத்து எரிக்க கூடாது என்றும், மாசில்லாத பொள்ளாச்சியை உருவாக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2023-01-12 18:45 GMT

பொள்ளாச்சி, 

போகி பண்டிகையையொட்டி பொதுமக்கள் குப்பைகளை தீ வைத்து எரிக்க கூடாது என்றும், மாசில்லாத பொள்ளாச்சியை உருவாக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான நாளை (சனிக்கிழமை) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகளில் இருந்து தேவையில்லாத பொருட்களை அகற்றி தீ வைத்து எரிப்பார்கள். இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படக்கூடும். எனவே புகையில்லாத போகி, மாசில்லாத பொள்ளாச்சி என்று பொள்ளாச்சி நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். இதில் நகர்நல அலுவலர் முருகானந்தம் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கப்படும்

போகி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் வீடுகளில் உள்ள தேவையில்லாத பொருட்களை அகற்றி தீயிட்டு எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் வெளிவரும் நச்சு வாயுக்களினால் பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக நிறுவனங்களில் சுத்தம் செய்து வெளியேற்றும் கழிவு பொருட்களை பொது இடங்களில் தீயிட்டு கொளுத்தவோ, வீசி எறியவோ கூடாது.

குப்பைகள், கழிவுகளை முறையாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும். நகராட்சியின் தூய்மை பணிக்கு ஒத்துழைப்பு அளித்து சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டும். இதையும் மீறி குப்பைகளை பொதுஇடங்களில் தீவைத்து எரித்தாலோ, வீசி எரிந்தாலோ பொது சுகாதார சட்ட பிரிவுகளின்படி சம்பந்தப்பட்ட நபர்கள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாசில்லாத பொள்ளாச்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்