பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்
பன்றிகளுக்கு நோய் பாதிக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் டாக்டர் கோவில் ராஜா கூறினார்.
சாத்தூர்,
பன்றிகளுக்கு நோய் பாதிக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் டாக்டர் கோவில் ராஜா கூறினார்.
ஒருங்கிணைப்பு கூட்டம்
சாத்தூர் அருகே அமீர்பாளையம் பகுதியில் பன்றிகள் இறந்து விட்டன. இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறை மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இறந்த பன்றிகளிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நோயை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
63 பன்றிகள்
பின்னர் நோய் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தாக்கப்பட்ட பன்றிகளை கண்டறிந்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மண்டல இணை இயக்குனர் தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவ குழுவினருடன் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒத்துழைப்புடன் நோய் கண்டறியப்பட்ட 63 பன்றிகளை பிடித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பாதுகாப்பான முறைகளை பின்பற்றி பன்றிகளை அழித்து கிருமிநாசினி தெளித்து புதைக்கப்பட்டது.
மக்களுக்கு பரவாது
விருதுநகர் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் டாக்டர் கோவில் ராஜா கூறுகையில்,
சாத்தூரில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் காய்ச்சல் நோய் பரவுவதாக கிடைத்த தகவலின் பெயரில் மாவட்ட கால்நடை துறை கடந்த மாதம் ஒரு பன்றியின் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. அந்த பன்றிக்கு ஆப்பிரிக்கன் காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த நோய்க்கு தடுப்பு ஊசியோ சிகிச்சை முறையோ இல்லாத நிலையில் நோய் பாதிப்படைந்த பன்றிகளை அகற்றுவது தான் ஒரே வழி என கால்நடை துறை பன்றிகளை வளர்ப்போருக்கு அறிவுறுத்தியது. அதன் பேரில் பன்றிகளை சாத்தூரில் புறநகர் பகுதிக்கு கொண்டு வரச் சொல்லி பன்றிகளுக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்டு பன்றிகள் அகற்றப்பட்டன. பின்னர் பன்றிகளின் உடல் 20 அடிக்கு 15 அடி குழி தோண்டி புதைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் வேறு மிருகங்களுக்கோ மனிதர்களுக்கோ பரவ வாய்ப்பு கிடையாது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.