திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர், கமிஷனரைமுற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர், கமிஷனரைமுற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Update: 2023-05-24 13:35 GMT

அனுப்பர்பாளையம்

25 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர், கமிஷனரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், வரி செலுத்த மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர், 5-வது வார்டுக்குட்பட்ட தனலட்சுமி அவென்யூ, முல்லைநகர் மகாலட்சுமிநகர், 8-வது வார்டுக்குட்பட்ட துரைசாமிநகர் 9-வது வார்டுக்குட்பட்ட திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்தப் பகுதிகளுக்கு கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோடை காலம் என்பதால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நேற்று வரை குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் 5-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி ஜோதிமணி தலைமையில் நேற்று காலை திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சித் தலைவர் குமார், கமிஷனர் அப்துல் ஹாரிஸ் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தலைவர் மற்றும் கமிஷனரிடம், வரி செலுத்தவில்லை என்றால் வீடு தேடி வந்து குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நகராட்சி நிர்வாகம், பொது மக்களுக்கு தேவையான குடிநீரை ஏன் வழங்குவதற்கு தாமதம் செய்கிறது என்றும், இந்த ஆண்டிற்கு செலுத்திய வரிக்கே குடிநீர் வழங்குவதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு தகுதியில்லாத நிலையில், எதன் அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கும் சேர்த்து வரி செலுத்தினால் வரி சலுகை வழங்கப்படும் என்று நிர்வாகம் கூறுகிறது என்றும், சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றால் நாங்கள் வரி செலுத்த மாட்டோம் என்று கூறியும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைய lடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு 3 நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் மற்றும் தலைவர் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் 3 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதன் பின்னரே பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

-------

Tags:    

மேலும் செய்திகள்