திண்டிவனத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

திண்டிவனத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-06-22 18:45 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் 19-வது வார்டுக்குட்பட்ட ரொட்டி கார தெருவில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை அதிகாரிகள் சரிவர மூடவில்லை. இதனால் மழை பெய்யும் போது அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையாலும் செம்மண் கரைந்து சாலையில் ஆங்காங்கே தண்ணீர் நிற்கிறது. மேலும் சாலை சேறும் சகதியுமாக மாறி காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவறி விழுந்து விழும் விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நாற்று நட்டு போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்