வேலூர் பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

ஆடி அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

Update: 2023-08-16 14:05 GMT

ஆடி அமாவாசை

இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களின் நினைவாக தானம் செய்து, காக்கைக்கு உணவு படைப்பார்கள். ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட சிறப்பானதாகும்.

இந்த 3 மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதன்மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்துக்கள் புனித தீர்த்தங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அதன்படி வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் முன்னிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர். இதற்காக அதிகாலையிலேயே ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர்.

பொதுமக்கள் பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

பூக்கள் விலை உயர்வு

ஆடி அமாவாசையையொட்டி திருஷ்டி பூசணிக்காய், பூக்கள் அதிகளவில் விற்பனையானது. அதனால் பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வந்தன.

கடந்த மாதம் 17-ந் தேதி முதலாவது ஆடி அமாவாசை வந்தது. அன்றைய தினம் பலர் விரதம் இருந்து தர்ப்பணம் செய்யவில்லை. 2-வது ஆடி அமாவாசையான நேற்று தான் பெரும்பாலானோர் விரதம் இருந்து தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு படையலிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்