கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு
கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு
திருப்பூர்
திருப்பூரில் காயிதேமில்லத் நகரில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட சத்யாநகர், சுகுமார்நகர், காயிதே மில்லத்நகர், சபாஷ் நகர் பகுதிகளில் ஓடை புறம்போக்கு பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களை வெளியேற்றி அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. 108 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.
அதன்பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குடியிருப்பு பகுதியில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பின்னர் நல்ல தண்ணீரை நொய்யல் ஆற்றில் விடுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.
எதிர்ப்பு
இருப்பினும் அந்த பகுதியில் தற்காலிக கட்டுமான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இதை அறிந்ததும் அப்பகுதியினர் நேற்று காலை சென்று பணிகளை தொடர வேண்டாம் என்று தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ., கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். பின்னர் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, குடியிருப்புக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது. வேறு பகுதியில் அமைக்க வேண்டும். இந்த பகுதியில் பணிகளை தொடங்கினால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அந்த வார்டு கவுன்சிலர் பாத்திமா தஸ்ரின், இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கடந்த மாமன்ற கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.
கலெக்டரிடம் மனு
பின்னர் நொய்யல் ஆற்றின் கரையோரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள பகுதியையும் அவர்கள் பார்வையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், மேயர், எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து மனு கொடுத்து முறையிட உள்ளதாக தெரிவித்தனர்.