திருப்பூர்
பல்லடம் நாரணாபுரம் ஊராட்சி செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர், மின் இணைப்பு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பு உள்ளதாகவும், உடனே அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
நேற்று குடிநீர், மின் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்க சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பல்லடம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் மாரிமுத்து கோரிக்கை குறித்து பேசினார். நாளைக்குள் (இன்று) ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளோம். அதன்பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அகற்றும் முடிவை எடுத்தால், மாற்று இடம் வழங்கிய பிறகு வீடுகளை அகற்றுவதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.