பொதுமக்கள் சாலை மறியல்
மடத்துக்குளம் அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமூர்த்தி குடிநீர்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருமூர்த்தி கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக குடிநீர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாகவும், குழாய் உடைப்பை சீரமைப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மடத்துக்குளத்தையடுத்த ஆண்டியக்கவுண்டனூர் பகுதியில் கடந்த 15 நாட்களாக சரியான அளவில் திருமூர்த்திமலை குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் நேற்று காலை ஆண்டியக்கவுண்டனூர் பஸ் நிறுத்தம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் வாகனங்களை சிறைபிடித்ததுடன், பெண்கள் காலி குடங்களுடன் உடுமலை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் உறுதி
உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து வந்த மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் குடிநீர் பிரச்சினை சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காலை நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.