"பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்" - செல்வப்பெருந்தகை
தமிழக மக்கள் எந்த காலத்திலும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ் மொழியின் மீது பாசத்தை பொழிகிறார் பிரதமர் மோடி. உங்களிடம் தமிழில் பேசப் போகிறேன் என்கிறார். உங்கள் மொழிக்கு மரியாதை வழங்க துடித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். ஆனால், செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு 2017 முதல் 2020 வரை மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூபாய் 12.31 கோடி மட்டுமே. ஆனால், 24,000 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு அதே காலக்கட்டத்தில் ஒதுக்கிய தொகை ரூபாய் 643.84 கோடி.8 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழிக்கு ஒதுக்கிய தொகையை விட 50 மடங்கு அதிகமாக காலாவதியான சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதுதான் மோடியின் தமிழ் பாசத்திற்கு அடையாளம். மோடியின் இரட்டை வேடத்திற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?மோடியின் தமிழக விரோத போக்கை முற்றிலும் அறிந்து வைத்திருக்கிற தமிழக மக்கள் இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள். தமிழகத்திற்கு எத்தனை முறை மோடி வந்தாலும் மக்களின் வெறுப்பிற்கும், கோபத்திற்கும் ஆளாகி இருப்பதிலிருந்து மோடி மீளவே முடியாது. தமிழகம் என்பது பா.ஜ.க.வின் எதிர்ப்பு பூமி. தமிழக மக்கள் எந்த காலத்திலும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.