சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த மக்கள்

விடுமுறை நாளான நேற்று குமரியில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு மக்கள் படையெடுத்தனர்.

Update: 2022-12-18 18:45 GMT

கன்னியாகுமரி:

விடுமுறை நாளான நேற்று குமரியில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு மக்கள் படையெடுத்தனர்.

கன்னியாகுமரி

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் அங்கு வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்தநிலையில் நேற்று விடுமுறைநாள் என்பதால் கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையிலேயே ஏராளமான அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். அப்போது சுற்றுலா பயணிகள் பலர் தங்களது செல்போன்களில் சூரியன் உதயமான காட்சியை ஆர்வமுடன் படம் பிடித்ததை காணமுடிந்தது.

இதையடுத்து அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று பார்த்து ரசித்தனர்.

இதபோல் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திற்பரப்பு

குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு உற்சாகமாக குளித்தனர்.

பின்னர் அருவியின் மேல் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையிலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

இதேபோல் மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, முட்டம், வட்டக்கோட்டை உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்