சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னையில் தங்கியிருந்து வேலை செய்யும் மக்கள் இன்றிலிருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி இன்று மாலை முதலே சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மக்கள் ஒரே நேரத்தில் கார், பைக் என தங்களது வாகனங்களில் சென்னையில் இருந்து புறப்பட்டு வருவதால், செங்கல்பட்டு அருகே உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.