சுற்றுலாத்தலங்களில் திரண்ட பொதுமக்கள்

சுற்றுலாத்தலங்களில் திரண்ட பொதுமக்கள்

Update: 2022-08-15 12:07 GMT

தளி

சுதந்திர தின விடுமுறையையொட்டி சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் திரண்டனர்.

பஞ்சலிங்க அருவி

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது.

இந்த ஆறுகள் பல்வேறு விதமாக வனப்பகுதியில் ஓடி வந்து பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. நீர்வழித்தடங்களில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இதனால் தண்ணீர் உடலின் மேல் விழும்போது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு வருவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி பஞ்சலிங்க அருவியில் நிலையான நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நேற்று திருமூர்த்திமலையில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர்.

அருவியில் குவிந்தனர்

பின்னர் அனைவரும் ஒரு சேர பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளிக்க முயன்றனர். இதனால் அருவிப்பகுதியில் கூட்டம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அடிவாரப்பகுதிக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். செல்லும் வழியில் படகு இல்லம், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து செல்பியும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோன்று மற்றொரு சுற்றுலா தலமான அமராவதி அணைப்பகுதியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். பின்னர் வனத்துறையினரால் பராமரிக்கப்படும் முதலைப் பண்ணைக்கு சென்று முதலைகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதி முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்