மதுக்கடை முன்பு திரண்ட பொதுமக்கள்

கடையம் அருகே மதுக்கடை முன்பு திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-28 18:45 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெய்க்காலிப்பட்டியில் மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடை அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனையடுத்து தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் இந்த கடையை மூடக்கோரி மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், மதுரை மண்டல மேலாளர் அருண் சத்யா, மாவட்ட மேலாளர் கந்தன் ஆகியோரிடம் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மதுக்கடை மூடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மீண்டும் இந்த மதுக்கடை திறப்பதாக தகவல் பரவியதையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் கடை முன்பு திரண்டனர். கடையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அருவேல்ராஜன் உள்பட பலர் வந்தனர்.

இதையடுத்து அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ஹரிஹரன், கடையம் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்சிலா பரமசிவன் ஆகியோர் அங்கு திரண்ட மக்களிடம், இந்த கடை இனிமேல் திறக்கப்படாது, நிரந்தரமாக மூடப்படும், என கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்