வேலூர் கோட்டை பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதல்
காணும் பொங்கலையொட்டி வேலூர் கோட்டை பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காணும் பொங்கலையொட்டி வேலூர் கோட்டை பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காணும் பொங்கல்
தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதியும், உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் மாட்டுப்பொங்கல் நேற்றும் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது.
காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் அருகே உள்ள பூங்கா, அணைகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்வது வழக்கம்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டை, அமிர்தியில் உள்ள சிறு வனஉயிரின பூங்கா, மோர்தானா அணை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வேலூர் நகரில் உள்ள ஒரே சுற்றுலா தலமாக கருதப்படுவது வேலூர் கோட்டை தான். இன்று காலை முதலே கோட்டைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
மதியம் 1 மணி வரை பூங்கா திறக்கப்படவில்லை. ஒருசிலர் இரும்பு கம்பியை தாண்டி குதித்து உள்ளே சென்றனர். அதிகளவில் மக்கள் வரத்தொடங்கியதால் மதியம் 1 மணிக்கு பூங்கா திறக்கப்பட்டது.
பூங்காவில் மக்கள் கூட்டம்
இதையடுத்து குடும்பம், குடும்பமாக பூங்காவுக்கு சென்று அமர்ந்து பொழுதுபோக்கினர். மாலையில் பொதுமக்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் கோட்டை பூங்கா நிரம்பியது.
இதையொட்டி ஏராளமான தற்காலிக கடைகளும் அங்கு முளைத்தன.
காலை முதலே வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவ்வப்போது ஒலிபெருக்கியில் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள், குழந்தைகளை தனியாக அனுப்ப வேண்டாம். அகழியோரம் அமரவேண்டாம் என்று அறிவுரை வழங்கிக்கொண்டே இருந்தனர்.
கோட்டைக்கு வந்த பொதுமக்கள் கோட்டையையும், அகழியையும் கண்டுரசித்தனர். செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.