அன்னுக்குடி தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?

அன்னுக்குடியில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சமுதாய கூடத்தில் பாடம் படித்து வருகிறார்கள். அந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-11-17 18:45 GMT

அன்னுக்குடியில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சமுதாய கூடத்தில் பாடம் படித்து வருகிறார்கள். அந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள குலமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னுக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அன்னுக்குடி, குலமாணிக்கம், வேற்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளி கட்டிடம் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது சேதம் அடைந்தது. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. கட்டிடத்தின் தூண்களிலும் விரிசல் ஏற்பட்டு, கட்டிடம் அபாய நிலையில் உள்ளது. விரிசல்கள் வழியாக மழைநீர் ஒழுகி வகுப்பறையில் தண்ணீர் தேங்கும் பரிதாபம் நிலவுகிறது.

சமுதாய கூடத்தில் வகுப்புகள்

பள்ளி கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுவதால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அங்குள்ள சமுதாய கூடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து அன்னுக்குடி கிராமத்தை சேர்ந்த தேவி கூறியதாவது:- அன்னுக்குடி கிராமத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகம்பேர் வசிக்கிறார்கள். என்னை போன்ற ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அன்னுக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர்.

புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

கஜா புயலின்போது பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால் பலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதையடுத்து சேதம் அடைந்த பள்ளி கட்டிடம் மூடப்பட்டது. அதன்பின்னர், சமுதாய கூடத்தில் வைத்து பள்ளி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சமுதாய கூடத்தில் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லை. எனவே அன்னுக்குடி தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

அன்னுக்குடி மணி:- அன்னுக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. சற்று தூரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்து வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் சென்று வருவதற்கு சிரமம் ஏற்படுகிறது. சமுதாய கூடம் வகுப்பு நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை. எனவே புதிதாக பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்