காரைக்காலில் இருந்து கன்னியாகுமரிக்கு தினசரி ரெயில் இயக்கப்படுமா?- பொதுமக்கள்

காரைக்காலில் இருந்து கன்னியாகுமரிக்கு தினசரி ரெயில் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-01-22 19:15 GMT

காரைக்காலில் இருந்து கன்னியாகுமரிக்கு தினசரி ரெயில் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இரட்டை ரெயில் பாதை

காவிரி டெல்டாவின் கடைகோடி மாவட்டமாக நாகை மாவட்டம் திகழ்கிறது. சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரும் இந்த மாவட்டம் போக்குவரத்து வசதியில் மிகவும் பின் தங்கி உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, மதுரை போன்ற தென் மாவட்டங்களில் இருந்தும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து நாகை, காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி சரிவர இல்லாததால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சிக்கல், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு செல்ல வெளி மாவட்ட மக்கள் பெரும்பாலும் பஸ்களையே அதிகம் நம்பி உள்ளனர். இந்த நிலையில் காரைக்காலில் இருந்து நாகை வழியாக சென்னைக்கு புதிதாக ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து நாகை ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் மத்திய ரெயில்வே அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

இரட்டை ரெயில் பாதை

கடந்த 10 ஆண்டுகளில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ரெயில்வேக்கு வருவாய் வந்துள்ளது. இதில் ஒரு பகுதியை செலவு செய்து தஞ்சை- நாகை வழித்தடத்தை இரட்டை பாதையாக மாற்ற வேண்டும்.

முதற்கட்டமாக தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் கிராசிங் ரெயில் நிலையங்களாக மாற்ற வேண்டும்.

வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, பழனி, பொள்ளாச்சி வழியாக கோயம்புத்தூருக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும்.

கன்னியாகுமரிக்கு புதிய ரெயில்

காரைக்கால் ரெயில் நிலையத்தில் இருந்து நாகூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும். வாரம் இருமுறை இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய ரெயில் சேவையான (16361 / 16362) எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ரெயிலை விரைவில் இயக்க வேண்டும். நாகை மற்றும் நாகூர் ரெயில் நிலைய நடைமேடைகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். நடந்து செல்வதற்கு கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே ரெயில் நிலைய நடைமேடைகளை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்