திருவாரூரில், ஆபத்தான நிலையில் உள்ள குறுகலான ரெயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தி புதிய பாலம் கட்டப்படுமா?

திருவாரூரில் ஆபத்தான நிலையில் உள்ள குறுகிய ரெயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தி புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-10-18 18:45 GMT

திருவாரூரில் ஆபத்தான நிலையில் உள்ள குறுகிய ரெயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தி புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ரெயில்வே மேம்பாலம்

திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம் மற்றும் நாகை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர் நகருக்குள் வருவதற்கு முக்கிய இணைப்பு பாலமாக இருப்பது ரெயில்வே மேம்பாலம் ஆகும்.

மிகவும் செங்குத்தாகவும், குறுகலாகவும் உள்ள இந்த பாலம், நகரின் எல்லையான சீனுவாசபுரத்தில் ரெயில் பாதையை கடக்கின்ற வகையில் உள்ளது. 40 அடி உயரத்துக்கு மேலாக செங்குத்தாக இருப்பதால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு, அதிகம்பேரை பலி வாங்கி உள்ள இந்த பாலம் மரணப்பாலம் என அழைக்கப்பட்டு வருகிறது.

நாகை பிரதான சாலை

முன்பு பாலம் இருந்த பகுதியில் திருவாரூரில் இருந்து நாகை செல்லும் பிரதான சாலை அமைந்து இருந்தது. மேலும் இந்த இடத்தில் நாகை பகுதிக்கு செல்லும் ரெயில் வழிப்பாதை இருந்ததால் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டு இருந்தது.

மக்கள் தொகை அதிகரிப்பு, வாகன நெருக்கடி காரணமாக திருவாரூரில் இருந்து நாகை பகுதிக்கு செல்வதற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் பழைய வழிப்பாதையில் உள்ள ரெயில்வே கேட்டை மூடிட ரெயில்வே நிர்வாகம் முடிவு எடுத்தது. இதற்கு பொதுமக்கள், வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

கல்லூரி மாணவர்கள்

இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் அங்கு மேம்பாலம் அமைத்து தருவதாக அறிவித்தது. இதனையடுத்து மிகவும் செங்குத்தான குறுகிய ரெயில்வே மேம்பாலம் கடந்த 1987-ம் ஆண்டு கட்டப்பட்டது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மட்டுமே செல்லும் வகையில் இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளது.

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள திரு.வி.க. கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சீனுவாசபுரம், கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம், ஆண்டிப்பாளையம், சேமங்கலம், கள்ளிக்குடி ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் திருவாரூர் நகருக்கு வருவதற்கு புறவழிச்சாலையை பயன்படுத்தினால 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டி உள்ளது. இதனால் இந்த செங்குத்தான பாலத்தை மிகுந்த சிரமத்துடன் பயன்படுத்தி நகருக்குள் வருகின்றனர். எந்தநேரமும் போக்குவரத்து மிகுந்த பாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பாலம் அடிக்கடி பழுதடைவதும், அதற்கு போராட்டம் நடத்தி சீரமைப்பதும் வழக்கமாக உள்ளது.

உறுதி தன்மை

பாலம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளை கடந்து விட்டதால் பாலத்தின் உறுதி தன்மை குறைந்துள்ளது. பாலத்தின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் இந்த வழிப்பாதையில் குறைவான எண்ணிக்கையிலேயே ரெயில்கள் சென்ற நிலையில் தற்போது அதிகமான ரெயில்கள் சென்று வருகின்றன.

இந்த பாலத்தின் துண்களின் உறுதி தன்மையும் ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். திருவாரூர் நகரின் முக்கிய இணைப்பு பாதையாக உள்ள ரெயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தி புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டுகொள்ளவில்லை...

இதுகுறித்து கிடாரங்கொண்டானை சேர்ந்த சரவணன் கூறுகையில், 'கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்கள் திருவாரூர் நகருக்கு வருவதற்கு முக்கிய வழிப்பாதையாக செங்குத்தான ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தினை ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. பாலம் பழதடைந்தால், அதனை அந்த பகுதி மக்களே சீரமைக்க வேண்டிய நிலை தான் உள்ளது.

புதிய பாலம்

மிகவும் செங்குத்தாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சற்று சிரமப்பட்டு தான் கடந்து செல்கின்றனர். இந்த பாலம் தவிர்த்து திருவாரூர் நகருக்கு செல்ல வேண்டுமானால் குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச்செல்ல வேண்டும். எனவே ரெயில்வே நிர்வாகம் இந்த பாலத்தினை அகற்றி வாகனங்கள் சென்று வரும் வகையில் அகலமான புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்