வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த மக்கள்
வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகையிட முயற்சி
நாகர்கோவில் ஒழுகினசேரி ரெயில்வே பாலம் அருகே உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிக்கும் மக்கள் நேற்று இரவு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் தினகரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடத்த வந்தவர்கள் கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து பேசினர்.
பின்னர் இதுபற்றி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் தினகரனிடம் கேட்டபோது, "ஒழுகினசேரி ரெயில்வே பாலம் அருகே 18 குடும்பங்கள் கடந்த 46 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. அந்த வீடுகளை அகற்றும்படி கூறியதால் 7 குடும்பத்தினர் அடுக்கு மாடிக்குடியிருப்புக்கு ரூ.2.50 லட்சம் கொடுத்து குடியேறி விட்டார்கள். ஆனால் மீதமுள்ள 11 குடும்பங்கள் பணம் இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல முடியவில்லை. அதோடு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வேறு எங்கும் இடமோ, சொத்தோ கிடையாது. எனவே அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு வீடுகளை இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த வந்தோம். ஆனால் மாற்று இடம் கொடுப்பதாக கலெக்டர் கூறினார். இதனால் தற்காலிகமாக முற்றுகை போராட்டத்தை கைவிட்டுள்ளோம்" என்றார்.