குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-31 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி ஊராட்சி விரிவாக்கம், கற்பக விநாயகர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இந்த நகர் உருவாகி 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அங்கு வசிப்பவர்கள், அருகில் உள்ள தெருக்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனுவும் அளித்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், தற்போது கோடை காலம் என்பதால் அவர்கள் வழக்கமாக தண்ணீர் பிடிக்கும் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடாக கிடைக்கிறது. எனவே இவர்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.

காலிகுடங்களுடன் மறியல்

விவசாய விளை நிலங்களுக்கு சென்று குடிநீர் எடுத்தாலும் தண்ணீர் பிடிக்கக் கூடாது என தனிநபர்கள் பிரச்சினை செய்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை அந்த பகுதியில் விருத்தாசலம்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குடிநீர் மற்றும் சாலை, தெருமின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தராத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தனர்.

இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்