குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தியாகதுருகத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த 4 நாட்களாக 12 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். அதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.