கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-15 00:13 GMT

கடத்தூர்

கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகிக்கப்படவில்லை

கோபி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவலூர் ஊராட்சியில் உள்ளது எழந்தகாடு கிராமம். இங்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்து கொடுக்க குழாய்கள் அமைத்து இணைப்பு தரும் பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எழந்தகாடு கிராமத்துக்கு கடந்த 5 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் சிறுவலூர்-கவுந்தப்பாடி ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் சிறுவலூர் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறும்போது, 'நடவடிக்கை எடுத்து விரைவில் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சிறுவலூர்-கவுந்தப்பாடி ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்