ஏரிக்கரை உடைத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தண்டராம்பட்டு அருகே ஏரிக்கரையை உடைத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-18 16:11 GMT

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே ஏரிக்கரையை உடைத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை விரிவாக்க பணி

தண்டராம்பட்டு அருகே செட்டிபட்டு கிராமத்தில் இருந்து அரூர் வரை நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்கும் விரிவாக்க பணிகள் பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக இன்று கீழ்சிறுபாக்கம் ஊராட்சியில் மெயின் ரோட்டை ஒட்டி உள்ள சின்ன ஏரிக்கரை பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்தனர்.

அப்போது பொதுமக்கள் ஏரிக்கரையை உடைத்து அகற்றக் கூடாது என வலியுறுத்தினர். ஆனால் ஏரிக்கரை அகற்றும் பணியை தொடர்ந்து நடந்ததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் சேலம் பகுதியில் இருந்து தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலை நோக்கி வந்த ஏராளமான, கார், வேன் மற்றும் பஸ்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த போக்குவரத்து பாதிப்பு நீடித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் முன் அறிவிப்பு எதுவும் இன்றி இந்த ஏரிக்கரையை அகற்றி வருகின்றனர்.

திடீரென்று மழை பெய்தால் ஏரி நிரம்பி ஊருக்குள்ளாக தண்ணீர் புகுந்து விடும்.

எனவே சாலை விரிவாக்க பணி செய்வதற்கு முன்பு ஏரிக்கரைக்கு உள்பகுதியில் முன்னெச்சரிக்கையாக பெரியதாக புதிய ஏரிக்கரை கட்டி கொடுத்துவிட்டு ஏரிக்கரை பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்