மழை நிவாரணம் ரூ.1000 வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழைநிவாரணம் ரூ.1,000 வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழைநிவாரணம் ரூ.1,000 வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் கனமழையால் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.உமையாள்பதி கிராமத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்காததை கண்டித்தும், அரசு அறிவித்த ரூ.1,000 போதாது, கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உமையாள்பதி கிராமத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த மறியலால். மாதானம்-சீர்காழி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.